2021 ஜனவரி இல், ஐக்கிய அமெரிக்க குடியரசின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற கையோடு, அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட பிரகாரம், அமெரிக்காவானது மீண்டும் பாரிஸ் பருவ கால ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளும் என உறுதி அளித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ‘பாரிஸ் பருவ கால ஒப்பந்தம் என்றால் என்ன? ‘ என்பதை அறியும் ஆர்வம் எம்மில் சிலரிற்கு ஏற்பட்டிருக்கலாம். அதைப்பற்றிய சிறிய ஒரு தொகுப்பு – தமிழில் இதோ…
பாரிஸ் பருவ கால ஒப்பந்தம் என்பது 2015ம் ஆண்டில் பிரான்சில் இடம்பெற்ற UNFCCC (United Nations Framework Convention on Climate Change’s) – ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட 195 நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இதன் பிரதான நோக்கம்,பச்சைவீட்டு வாயுக்களின் உபயோகத்தை, இந்த நூற்றாண்டில் கணிசமாகக் குறைத்து (2 டிகிரி அளவில்), அந்தக் குறைப்பை ஒரு குறித்த மட்டத்தில் தொடர்ந்து பேணுவதன் மூலம் பூகோள வெப்பமடைதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதலாகும். இவ் ஒப்பந்தமானது, வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தமது நாடுகளின் காலநிலை மாற்றத்தில் அக்கரை செலுத்தி அதை சீராக்கவும், அந்நாடுகள் உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு உரிய வழிகாட்டல்களையும் வழங்குகிறது.
ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் பின்னனியும் :
2015 இல் பாரிஸில் நடைபெற்ற UNFCC இன் 21 வது குறித்த ஒரு கூட்டத்தொடரில் (COP 21), வரலாற்று முக்கியத்துவமிக்க இவ் உடன்படிக்கை தொடர்பான தீர்மானமொன்றை, 195 உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்தாலோசித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே தமது நாட்டின் காங்கிரஸில் கார்பன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்துவது பற்றி கலந்தாலோசித்து வந்த ஐக்கிய அமெரிக்க குடியரசு, இவ்வொப்பந்தத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்த கையோடு, 2016 செப்டம்பரில் உத்தியோகபூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உலகில் மொத்தமாக வெளியிடப்படும் பச்சைவீட்டு வாயுக்களில் 55% மான பச்சைவீட்டு வாயுக்களை உலகிற்கு வெளியிடும் நாடுகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வரை இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாடு காணப்பட்ட நிலையில், 2016 அக்டோபர் 05 இல் இந் நிலைமையும் சீராகவே, பாரிஸ் பருவகால உடன்படிக்கையானது 2016 நவம்பர் 04 இல் அமுலுக்கு வந்தது.
யுத்த நிலைப் பிரதேசமான சிரியா உள்ளடங்களாகஇ 197 நாடுகள் – கிட்டத்தட்ட உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் உம் பாரிஸ் பருவகால உடன்படிக்கையும்:
”பருவகால மாற்றம் என்பது வெறும் மாயை – வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு உருவாக்கப்பட்ட போலியான தோற்றப்பாடு” என்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், ஒபாமாவிற்கு அடுத்ததாக பதவியேற்ற கையோடு இவ்வொப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் பலனாக 2020 நவம்பர் 04 இல் அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.
இவ்வாறு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற ட்ரம்ப் முஸ்தீபுகளை மேற்கொண்ட போதும் பெரும்பாலான அமெரிக்க குடிமக்களும் அந்நாட்டின் முன்னனி வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்தும் அமெரிக்காவை ஒப்பந்தத்தில் தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் வெளிப்பாடாக America’s Pledge (அமெரிக்காவின் உறுதிமொழி), United States Climate Alliance (ஐக்கிய இராச்சியத்தின் பருவநிலை முன்னனி), We Are Still In (நாங்கள் இப்போதும் உள்ளே இருக்கிறோம்) மற்றும் American Cities Climate Challenge (அமெரிக்க நகரங்களின் பருவநிலை சவால்) போன்ற அமைப்புக்கள் பாரிஸ் பருவகால ஒப்பந்தத்திற்கு சார்பாக அமெரிக்க மக்களால் உருவாக்கப்பட்டன.
இந் நிலையில்தான் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியரசின் புதிய ஜனாதிபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற முதல் நாளன்றே அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா ஒப்பந்தத்தில் மீள இணைவதற்கான கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து 2021 பெப்ரவரி 19 இல் ஐக்கிய அமெரிக்க குடியரசு பாரிஸ் பருவகால ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக மீள இணைந்தது.

Leave a comment